11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?
சென்னை:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.
அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.
இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
